Mittwoch, 27. Oktober 2010

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்குச் சில கேள்விகள்

தமிழர்களின் தலைமையிலான தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்குச் சில கேள்விகள்......
தமிழர்களாகிய எங்களின் வாக்குகள் அடுத்து வரும் தேர்தல்களில் உங்களுக்கு வேண்டுமா?
ஆட்சிக்கு வந்தால் இவற்றையெல்லாம் செய்து முடிப்பதாக உறுதியளித்தால்தான் எங்களின் வாக்குகள் உங்களுக்கு!

1. தமிழர் இழந்த ஆற்றுநீர் உரிமைகளை மீட்க உருப்படியான உங்களின் திட்டம் என்ன என்பதைத் திட்டவட்டமாக முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். காவிரி, பாலாறு, தென்பெண்ணை, முல்லைப்பெரியாறு அணை ஆகியவற்றின் மீதான வழிவழி வந்த உரிமையை அண்டை மாநிலத் 'திராவிடர்கள்' அடாவடித்தனமாகப் பறிப்பதையும், கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களையும் ஆணையங்களின் இடைக்காலத் தீர்ப்புகளையும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் மதிக்காததையும் கண்டும் காணாமல் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஆற்றுநீர்ப் பங்கீடுகளை வாங்கித் தராமல், தமிழகத்தையும் தமிழர்களையும் வஞ்சித்துக் கொண்டிருக்கும் தில்லி வல்லரசை எதிர்த்து உருப்படியாகப் போராடுவீர்களா?

2. தமிழர்களிடமிருந்து பறித்து மலையாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்ட இடுக்கி மாவட்டத்தை மீண்டும் தமிழகத்தோடு சேர்க்கும்படி போராடாமல் முல்லைப்பெரியாற்று அணையின் மீதான உரிமைக்காகக் குரலெழுப்புவது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதைதானே? அதனால், தமிழர்கள் பெரும்பான்மையராக வாழும் இடுக்கி மாவட்டத்தைத் தமிழகத்தோடு சேர்க்குமாறு போராடத் துணிவீர்களா?

3.தமிழர்கள் பெரும்பாலோராகவுள்ள சித்தூர் மாவட்டம் முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி இராதாகிருட்டினனின் அடாவடித்தனத்தால் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டது. சித்தூர் மாவட்டத்துக் குப்பத்தில் அணை கட்டித் தமிழ் நாட்டுக்குப் பாலாற்று நீர் வராமல் தடுக்கத் தெலுங்கன் முயல்கின்றான். இந் நிலையில், சித்தூர் மாவட்டத்தைத் தமிழகத்தோடு மீண்டும் சேர்க்கச் சொல்லிக் கேட்காமல், பாலாற்றின்மீது தமிழருக்குள்ள உரிமையை நிலைநாட்டுவோம் என்பது வெற்றுப் பம்மாத்துத்தானே? ஆகவே, சித்தூர் மாவட்டத்தை மீட்கப் போராடத் துணிவீர்களா?

4. மேற்குமலையில் தோன்றி நெல்லை மாவட்டத்தில் ஓடிய கருப்பானாறு முதலில் கிழக்குநோக்கி ஓடிக்கொண்டிருந்தது. ஓரிரு மலைப்பாறைகளை வெடிவைத்துத் தகர்த்த மலையாளிகள், அந்த ஆற்றை மேற்குநோக்கி ஓடுகின்ற ஆறாகச் செய்துவிட்டனர். தமிழகத்தை ஆண்ட/ஆளும் கழக ஆட்சிகள் எதுவும் இந்த அட்டூழியத்தை ஏனென்று தட்டிக் கேட்டதில்லை. கருப்பானாற்றின்மீது அவை உரிமை பாராட்டியதும் கிடையாது. நீங்கள் ஆட்சிக்கு வந்தால், மலையாளிகள் தான்தோன்றித்தனமாகவும் அடாவடியாகவும் மேற்குநோக்கி வலிந்து திருப்பிக்கொண்ட கருப்பானாற்றை மீண்டும் கிழக்குநோக்கித் திருப்பிவிடுவீர்களா?

5. கருநாடக, கேரள, ஆந்திர எல்லைப்புறங்களில் வாழும் தமிழர்கள் சொல்ல முடியாத துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். 1956 மொழிவழி மாநில உருவாக்கங்களின்போது தமிழ்நாட்டுக் கன்னடரும் தெலுங்கரும் வடவரும் தலைமையேற்றிருந்த திராவிட இயக்கமும் பேராயக் கட்சியுமே அதற்குக் காரணமாகும். இதனால், தமிழர் வாழும் கொள்ளேகாளம், பெங்களூர், கோலார்த் தங்கவயல், சித்தூர், இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு, கன்னியாகுமரியின் சில பகுதிகள் முதலான வளம் மிக்கப் பகுதிகளை இழந்தோம். அவற்றையெல்லாம் மீண்டும் தமிழகத்தோடு இணைப்பதற்கான உருப்படியான போராட்டங்களையும் உத்திகளையும் முன்னெடுப்பீர்களா?

6. 1956ஆம் ஆண்டில் 'தனிக்' கேரளம் அமைக்கப்பட்டது. பின்னர்ப் பழைய கன்னியாகுமரியின் ஒரு பகுதி மட்டும் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஆயினும், கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான 837 கட்டை (கிலோமீட்டர்) எல்லை இந்நாள் வரையில் வரையறுக்கப்படவில்லை. இதனால், மலையாளிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி, கண்ணகி கோயில் உள்ளிட்ட தமிழர்பகுதிகளையெல்லாம் மெல்ல விழுங்கி வருகின்றனர். எல்லையை வரையறுப்பதற்காகக் கூட்டப்பட்ட கூட்டங்களில் தமிழக அரசின் சார்பாக அனுப்பப்பட்ட தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகளெல்லாம் பெரும்பாலும் மலையாளிகளாகவே இருந்தனர். இதனால், கேரளத்துடனான தமிழகத்தின் எல்லைகள் வரையறுக்கப்படாமலேயே அரை நூற்றாண்டுக் காலம் ஓடிவிட்டது! தனித்தோ கூட்டணியாகவோ நீங்கள் ஆட்சிக்கு வந்தால், கேரளத்துடனான தமிழகத்தின் எல்லையை விரைந்து வரையறுப்பீர்களா? கேரளத்துடனான எல்லை வரையறுப்புப் பேச்சுகளுக்குத் தமிழக அரசின் சார்பாக மலையாள அதிகாரிகளை அனுப்பாமல் இருப்பீர்களா?

7. தமிழகம் வாசலில்லா வீடு! தமிழரின் எல்லைகளில் அயலாரின் ஊடுருவல் ஓயாது நடந்து வருவதால், தமிழகத்தின் எல்லைப்புறங்கள் உள்ளுக்குத் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றன. நீங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கென்றே எல்லைக்காப்புப் படை ஒன்றைக் கட்டியெழுப்புவீர்களா?

8. பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவரே அம் மாநிலங்களின் முதலமைச்சராகவும் அமைச்சர்களாகவும் இருப்பதைப்போல், தமிழின உணர்வு கொண்ட தமிழர்கள் மட்டுமே தமிழகத்தின் முதலமைச்சர்களாகவும் அமைச்சர்களாகவும் வர வேண்டும் என்னும் மரபைத் தோற்றுவிப்பீர்களா? அம் மரபைக் கண்ணெனக் காப்பீர்களா?

9. தமிழுக்குச் செம்மொழித் தகுதியை வழங்கிய தில்லி அரசு, அச் செம்மொழித் தகுதியைப் பெற வேண்டின், ஒரு மொழி 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருந்தால் போதும் என்று வேண்டுமென்றே ஒரு சூழ்ச்சிப்பொறியை இட்டுள்ளது. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குமுன் கன்னடமும் தெலுங்கும் தமிழின் வட்டார வழக்குகளாயிருந்தன. அவற்றைக் கொடுந்தமிழ் என்கிற வடுகு மொழிகள் என்றனர். அண்மையில், நாகை மாவட்டத்துச் செம்பியன் கண்டியூரில் கண்டெடுக்கப்பட்ட புதிய கற்காலத்துக் கற்கோடரியின்மீது தமிழ் எழுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புதிய கற்காலத்திலேயே தமிழுக்கு எழுத்து இருந்தது என்னும் உண்மை இதனால் தெரிய வந்தது., தமிழகத்தின் புதிய கற்காலம் 45,000 ஆண்டுகளுக்கு முந்தையது. ஆயினும், செம்பியன் கண்டியூரில் கிடைத்த தமிழ் எழுத்துகளைக் கொண்ட கற்கோடரியின் காலம் வெறும் கி. மு. 1000 ஆண்டளவிலானதுதான் என்று வாய் கூசாமல் குறைத்து மதிப்பிடுவது ஒரு புறம் கிடக்கட்டும். புதிய கற்காலத்திலேயே தமிழுக்கு எழுத்து இருந்தது என்ற உண்மையைத்தான் இங்குக் கோடிட்டுக் காட்டுகின்றோம். குறைந்தது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுத்தும் இலக்கியமும் வரலாறும் கொண்டிருந்த தமிழ் மட்டுமே செம்மொழி எனப்படும் தகுதிக்கு உரியது என்று இந்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று ஆட்சிக்கு வந்தபின் தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவீர்களா?

10. பிற மாநிலங்கள் எல்லாவற்றிலும் அந்தந்த மாநில மொழிகளைப் பிற மொழியினரும்கூடக் கட்டாயமாகப் படிக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் தமிழருக்கும்கூடத் தமிழ் கட்டாய மொழியாக இல்லாத அவலநிலை உள்ளது. இந்த இழிவைப் போக்க, உங்கள் கூட்டணி ஆட்சி வந்தால் தமிழகத்திலுள்ள எல்லாரும் தமிழைக் கற்க வேண்டும் என்னும் சட்டத்தை இயற்றுவீர்களா?

11. தமிழகத்தில் தமிழை ஆட்சிமொழியாகவும் அலுவலக மொழியாகவும் பாடமொழியாகவும் வழக்குமன்ற மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் ஆக்குகின்ற சட்டத்தை இயற்றுவீர்களா?

12. 'தமிழே முதன்மொழி' என்ற பாவாணரின் மொழிக்கோட்பாடே தமிழக அரசின் மொழிக்கொள்கை என்று ஏற்றுக்கொண்டு, தமிழின் தாய்நிலையை மறுக்கும் 'மூலத்திராவிடம்' என்னும் பொய்க்கோட்பாட்டுக்குக் கடைவிரிக்கும் தமிழ் எதிர்ப்பாளர்களின் சூழ்ச்சியைக் கண்டித்துச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா?

13. தமிழர்களைத் 'திராவிடர்கள்' என்று அடையாளப்படுத்தவே கூடாது; தமிழர்களைத் 'தமிழர்கள்' என்று மட்டுமே எல்லா அரசு ஆவணங்களிலும் மடல்தொடர்புகளிலும் பாடநூல்களிலும் பிறவற்றிலும் குறிப்பிட வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவீர்களா?

14. தமிழைத் 'திராவிடமொழி' என்று இனிமேல் குறிப்பிடவே கூடாது என்றும், தமிழிலிருந்து கிளைத்த மொழிகளை இதற்குமேல் தமிழிய மொழிகள் என்றே குறிப்பிட வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா? பழந்தமிழ் எழுத்துகளைப் 'பிரமி' எழுத்துகள் என்று குறிப்பிடக்கூடாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா?

15. தமிழில் வேண்டுமென்றே பிறமொழிக் கலப்புடன் எழுதுவதைப் பிரான்சு முதலான நாடுகளில் உள்ளதைப்போல் தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் இயற்றுவீர்களா?

16. இனி வரும் தேர்தல்களில் அமைக்கப்படும் கூட்டணிகள் தமிழரால் மட்டுமே தலைமை தாங்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுப்பீர்களா? அந்தக் கூட்டணிகள், தமிழர்களின் கூட்டணிகளாக மட்டுமே இருக்குமாறு கண்ணுங்கருத்துமாகப் பார்த்துக்கொள்வீர்களா?

17. தமிழ்நாட்டில் பணிபுரியும் இந்திய ஆட்சித்துறை அதிகாரிகளும், இந்தியக் காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்களும், நடுவணரசு மாநில அரசு அதிகாரிகளும் தமிழர்களாகவே இருக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி அதைச் செயல்படுத்துவீர்களா?

18. பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் தமிழர்கள் இன்னலுக்கு ஆளாகும் போதெல்லாம் அவர்களுக்குத் தோள்கொடுப்பது தாய்த்தமிழகத்தின் கடமை என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா? அங்கெல்லாம் உள்ள தமிழர்கள் தமிழைக் கற்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வீர்களா? புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தமிழகத்துக் கல்வியகங்களில் தனி இடம் ஒதுக்குவீர்களா? "எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே!" என்னும் பாவேந்தரின் கொள்கையை நடைமுறைப்படுத்துவீர்களா?

19. தமிழ்நாட்டில் தொழில் தொடங்கத் தமிழர்களுக்கே முன்னுரிமை என்ற சட்டத்தை இயற்றுவீர்களா?

20. சாதி இடஒதுக்கீட்டையும் சலுகையையும் பற்றிய சட்டநாதன் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்து வீர்களா?

21. மேல்சாதி கீழ்ச்சாதி என்று பாராமல் தமிழர்கள் எல்லாருக்கும் இடஒதுக்கீடும், தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையில் இலவயக் கல்வியும் உண்டு என்று சட்டம் இயற்றுவீர்களா?

22. கன்னடருக்கு உள்ளதைப்போல் தமிழகத்திற்கென ஒரு தனிக்கொடியை உருவாக்குவீர்களா?

23. கருநாடகத்தில் பொதுத்துறையிலும் தனியார்த்துறையிலும் 80% வேலைகள் கன்னடருக்கே ஒதுக்கப்படுகின்றன. அதேபோல், தமிழ்நாட்டிலும்கூட எல்லாத் துறைகளிலும் 80% வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கு என்று ஒதுக்கப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவார்களா?
தமிழகத்திலுள்ள உந்துவண்டித் தொழிற்சாலைகளில் ஓர் உந்துவை உருவாக்க 40,000 குடுமை (கேலன்) தண்ணீர் வேண்டுமாம். சென்னையைச் சுற்றியுள்ள உந்துவண்டித் தொழிற்சாலைகளில் பணிபுரிவோரில் 60% தெலுங்கர்களாகவும் 20% மலையாளிகளாகவும் இருக்கின்றனர். இவ்வாறு தமிழ்நாட்டில் தமிழர்கள் சிறுபான்மையராயுள்ள பெரிய, சிறிய தொழிற்சாலைகளுக்கு இலவயமாகவோ சலுகை அடிப்படையிலோ தண்ணீர், மின்சாரம் முதலியவற்றை வழங்குவதை உடனே நிறுத்துவீர்களா?

24. தமிழக மீனவர்கள் கடல்மேல் கொண்டிருந்த உரிமையைப் பறித்துக்கொண்ட இந்தியப் பேரரசு, அந்த உரிமையை இப்போது சிங்களவனுக்குக் குத்தகை விட்டுள்ளது. இதனால், தமிழக மீனவரின் வாழ்வுரிமை பறிபோயுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையம், கல்பாக்கம் அணுவுலை, கூடங்குளம் அணுவுலை, இறால் பண்ணைகள், கரையோரப் பவழக்கொடிகளின் அழிப்பு, அலைவாய்க்காடுகளின் அழிப்பு முதலானவற்றால் தமிழகக் கரையோரத்தில் மீன்வளம் ஒழிந்து அது ஆழ்கடலுக்குத் தள்ளிப்போய்விட்ட நிலையில், தமிழக மீனவர்கள் இந்திய எல்லைக்குள்தான் மீன்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது பெரிய அட்டூழியமாகும். தமிழகத்தின் கடல் எல்லைகளைக் கடந்து ஆழ்கடலுக்குப் போய் மீன்பிடிக்கத் தமிழக மீனவர்களுக்கு உரிமை உண்டு என்று ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவீர்களா?
சிங்களவன் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றும் காயப்படுத்தியும் தளைப்படுத்தியும் அட்டூழியம் செய்யும் போதெல்லாம், தில்லி ஆண்டைகள் ஒரு முறைகூட வாய் திறந்து சிங்களவனைக் கண்டித்ததில்லை. இறந்த மீனவருக்கும் காயமுற்றவர்களுக்கும் உடைமைகளைப் பறிகொடுத்தவர்களுக்கும் சிங்களனிடமிருந்து இழப்பீடு கேட்டதும் இல்லை; வாங்கித் தந்ததும் இல்லை. இதனால், சிங்களன் சுட்டு இதுவரை செத்தவர்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் துன்புறுத்தப்பட்டவர்களுக்கும் தில்லி அரசு சிங்களனிடமிருந்து இழப்பீடு வாங்கித் தர வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா? தமிழக மீனவர்களின் தற்காப்புக்காக அவர்களுக்குத் துப்பாக்கிகளை வழங்குவீர்களா?

25. ஈழத் தமிழினத்தையே இல்லாது அழித்தொழிப்பதற்காகவும் அடிமைப்படுத்துவதற்காகவும் சிங்களன் தொடுத்துள்ள இனஒழிப்புப் போரானது 'இந்தி'யன் தமிழினத்தின்மீது நடத்துகின்ற ஒரு மறைமுகப் போரே என்பது உறுதி. இதனால், ஈழத்தமிழினம் எங்களின் சொந்த இனம் என்றும், அவர்களின் விடுதலைப் போருக்குத் துணைநிற்கத் தமிழகத் தமிழர்களுக்கும் உலகெலாமுள்ள தமிழர்களுக்கும் உரிமை உண்டு என்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவீர்களா?

26. தமிழீழ விடுதலைப்புலிகளின்மீது இந்தியா விதித்துள்ள தடையை உடனே நீக்க வேண்டுமெனச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவீர்களா?

27. சிறப்புப் பொருளியல் மண்டிலங்கள் என்னும் பெயரில் வடநாட்டுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டினப் பெருமுதலைகளுக்கும் ஆயிரமாயிரம் குறுக்கங்கள் என்று தமிழகத்தின் மண்ணைத் தாரை வார்ப்பதைத் தடுத்து நிறுத்தித் தமிழரின் மண்ணும் நீரும் தமிழருக்கு மட்டுமே சொந்தம் என்றும், அதை விற்கவோ வாங்கவோ பறிக்கவோ அயலார் யாருக்கும் உரிமை இல்லை என்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவீர்களா?
இந்திய அரசுச்சட்டத்தின் 370ஆம் பிரிவின்படி காசுமீரத்தில் உள்ளதைப்போல் தமிழரல்லாதார் யாரும் தமிழகத்து நிலத்தை வாங்கவோ விற்கவோ ஒற்றி வைக்கவோ முடியாது என்னும் சட்டத்தைத் தமிழகச் சட்டப்பேரவையில் இயற்றுவீர்களா?

28. ஆற்றுமணலை வரைமுறை இன்றிக் கொள்ளையடித்துச் சுற்றுசூழலுக்கும் அடிநீர் வளத்துக்கும் மிகப் பெரிய தீங்கைச் செய்துவரும் பெரும்புள்ளிகளுக்கும் அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகளுக்கும் வாழ்நாள் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்து அச் சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்துவீர்களா? அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வீர்களா?

29. ஆலைக்கழிவுகளை ஆறுகளில் விட்டு ஆற்றுநீரை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளை உடனே மூடுவீர்களா? இயற்கையை மாசுப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் சட்டம் இயற்றுவீர்களா?

30. பட்டித்தொட்டியெலாம் என்றும் தெருத்தெருவாக என்றும் தமிழக அரசே சாராயக்கடைகளைத் திறந்து வைத்துத் தமிழகத்தையே குடிகார நாடாகக் கெட்டழித்துக் கொண்டிருக்கும் கொடுமையை ஒழித்துத் தமிழரின் ஒட்டுமொத்த இனச்சீரழிப்பைத் தடுத்து நிறுத்துவீர்களா?

31. திரைப்பட மாயை, பிறவகைப் போதைப்பொருள்கள், மேலைப்பண்பாட்டை வரைமுறையின்றித் தழுவுதல் என்பவற்றால் நேர்ந்து வரும் பண்பாட்டுச் சீரழிவைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பீர்களா?

பெங்களூர் குணா -