Montag, 10. November 2008

நாக நாடு எனும் நாவந்தீவினிலே

நம்பிக்கை நாணயம் நன்னெறி


வாழியே நின் திருநாமம்

நாக நாடு எனும் நாவந்தீவினிலே
நானிலம் புகழும் மகாராட்டிரத்தில்
நலன்கள் பலப்பெற்று நலமுடன்
நன்மக்களாய் புகழுடன் வாழ்ந்த
சக்பால் ராம்ஜி பீம்பாய் வழிதோன்றல்
வான்புகழ் கொண்ட வல்லவனே
வையத்தில் வன்முறையே எங்கள் கொள்கை
என முழங்கி கொன்று குவிக்கும் கோரபற்களிடையே
வாடும் நின்குலமக்கள் வாட்டத்தைப்போக்க
வந்துதித்த வான்மதியே !
வந்துதித்த நாள்முதல் வறுமைக்கோலம் பூண்டு
வைராக்கியமுடன் கல்வி பல பெற்று
வான்புகழ் கொண்ட வள்ளலே
வளமார் நின்மக்கள் சரிநிகர் சமமாக வாழ
சட்டம் பலதீட்டிய வரலாற்று நாயகனே
வேலியே பயிரை மேய்வதே போல்
வேரிலே தோன்றும் புழுபோல பிறந்த
குலத்தையே அடகு வைத்து
கோடி கோடியாய் பணந்தனை சேர்த்தே
கொடியவர்கள் பலர்குபேர சம்பத்துடன்
வாழ்கின்றார் மான வுணர்ச்சியின்றி
அக்குல கேடுகள் பல அலறுகின்றன அவனியிலே
அண்ணலின் பேரைச்சொல்லி
அந்நல்லவர்களையும் சேர்த்து
வைரவிழா,மரகத விழா கொண்டாடும்
நின் பிறந்த நாளான ஏப்ரல் பதினாளிலே
புத்தனின் புனித வழி ஏற்ற அண்ணலே அம்பேத்கரே
அறிவுக்களஞ்சியமே அருள்வாய் எமக்கே நல்லறிவு
நும் அடியினை போற்றுகிறோம் அனைவரும்
நலம் பல பெற்று நானிலத்தில் வாழ
வாழியே நின்திரு நாமம் என்றும் வாழியே
வையகம் உள்ளளவும் வாழியவே

ஆக்கியோன் தங்கவயல் கு.பெருமாள்