Dienstag, 18. November 2008

இந்து வல்லான்மைக்குஎதிரக்குரல் எழுப்பிய முதல் தமிழன்

தமிழன் ஏடு ஆசிரியர் பண்டிதர் க.அயோத்திதாசர்
தமிழன் ஏட்டை தொடர்ந்து நடத்திய பண்டிதமணி ஜி.அப்பாதுரையாஃ

திருவாட்டி.இலட்சிமி பெருமாள்

அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய என் தாயார்
0௩.௧௧.௨00௮ ம் ஆண்டில் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று
தங்கவயல் விடிவெள்ளி
பண்டிதர் க.அயோத்திதாசர்,பண்டிதமணி அப்பாதுரையார்,
இரட்டைமலை சீனிவாசன்,என்.சிவராஜ்,அண்ணல் அம்பேட்கர் கொள்கைகளை தன் குரல்வள பேச்சால்
தங்கவயல் மக்களின் மனத்தில் வேருண்றச் செய்த
தன்னலமற்ற பதவிகளை துறந்த ஒடுக்கப்பட்ட தமிழர்களின் விடிவுக்காக குரல் எழுப்பிய தலைவர்
கே.பெருமாள் அவர்கள்
.
பண்டிதர் அயோத்தியதாசரின்’’ தமிழன்’’ ஏட்டை 1914 முதல் நடத்திய
பண்டிதமணி ஜி.அப்பாதுரையார்
அருளறம் உரைத்த அந்தணன் வாழி
முகவுரை
பண்டிட் ஜவர்லால் நேரு இந்திய இந்திய நாட்டின் பிரதராயிருந்தப்போது நாடெங்குமுள்ள பௌத்த சங்கங்களுக்கு நிதிவுதவி அளித்து பகவன் புத்தரின் 2500 ம் ஆண்டு ஜெயந்தியை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்ற முடிவை அறிவித்தார். அதுபோது தங்கவயல் தென்னிந்திய பௌத்த சங்கங்களின் சார்பில் நடைப்பெற்ற விழாவின் போது பண்டிதமணி ஜி.அப்பாதுரையார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவை மக்களுக்கு பயன்படும்வகையில் புத்தமாக வெளியிட வேண்டுமென்ற பேராவலினால் இம்முயற்சினை மேற்கொண்டுள்ளோம். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் புத்தமார்க்கத்தை தழுவியப்போது அவருடன் லட்சக்கணக்கான மக்கள் சரணடைந்து பௌத்தத்திற்கு மறுமலர்ச்சி உண்டாக்கினர்.அப்புனித மார்க்கத்தை ஏற்று அண்ணலின் வழியை பின்பற்ற துடிக்கும் மக்களுக்கு இச்சிறு நூல் பயன்படும் என்ற நோக்கத்துடன் வெளியிடப்படுகிறது. எனவே சமுதாய மாற்றத்தை, மறுமலர்ச்சியை விரும்பும் அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறேன்.
கே.பெருமாள்
தலைவர்
அம்பேத்கர் நினைவு நிதிக்குழுவினர்
பெங்களூர்-5
தங்கவயல் “ ஆசிரியர் நாவலர் தென்னிந்திய பௌத்த சங்கத் தலைவர் பண்டிதமணி ஜி.அப்பாதுரையார் அவர்கள் பகவன் புத்தரின் 2500ம் ஆண்டு விழாவின்போது ஆற்றிய சொற்பொழிவு.
அருளறம் உரைத்த அறவாழி அந்தணன்
அறவாழி அந்தணனாம் சாக்கிய புத்தரின்,
2500ம் ஆண்டின் திருவிழா, இவ்வாண்டு, இத்திங்கள் முழுமதி நிறைந்த, இந்நாளில் தொடங்கப்பட்டிருக்கிறது. அறிச்சான்ற உலகமக்கள், பலரும் இத்திருவிழாவில் கலந்துக்கொண்டு மகிழ்ச்சியடைவார்கள் என்பதற்குறிய அறிக்குறிகள் எங்கும் காணப்படுகின்றன. எண்பது கோடி மக்களை இடமாக கொண்ட பௌத்த உலகம் , புண்ணிய முதல்வனின் தண்ணிய அருளறத்தையுன்னி, ஆர்வப்பெருங்கடலில் ஆழ்ந்து நிற்கும் அடிமைத்தளை நீங்கி ஆட்சி நலம் பெற்ற நமது இந்திய மக்களும் அரசமர் செல்வனின் அரும்பெரும் விழாவைச் சிறப்புடன் ஆற்றி சீர்பெறெ வேண்டுமென்று , மக்கள் ஆட்சி மன்றத்தின் துணை இன்னொலியாக இந்தியாவெங்கும் இயங்கிகொண்டிருக்கிறது .
போதி விழாவென்னும் , இப்பெருவிழா இந்தியாவெங்கிலுமினிது நிறைவேற வேண்டுமென்னும் நன்னோக்கத்துடன் அறிஞர் , பேரவை ஒன்றை நிறுவி பெருநிதியையும் தந்துதவிய நமது இந்திய பாராளுமன்றத்தார்க்கு பௌத்த உலகம் என்றும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறது.
வாள் வலிமையும் , ஆட்சியின் ஆற்றலும் ,சேனைத்திரளும் துணைக்கொண்டு சிலமதங்கள் பரப்பப்பட்டிருக்கின்றன. . ஒரு துளியிரத்தமும் உலகிற் சிந்தாமலும் ஒருவரையும்
துன்புறுத்தாமலும் உலகிற் பரவிய மார்க்கமொன்றிருக்கிறதென்றால் அது பௌத்த மார்க்கம் என்பதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ ,முடியாதென்பதை வரலாற்று நூல்கள் வற்புறுத்துகின்றன.
வகுப்பு வேற்றுமையும், நாட்டுப்பூசலையும் அடிப்படையாகக்கொண்டே சில மதங்கள் தோன்றியிருக்கின்றன்.அவற்றின் வரலாற்றின்கண் அவ்வவ்வகுப்புக்கும் , நாட்டுக்கும் ,ஆதரவும் பெருமையும் காட்டப்பெற்று மற்றையோரைக் கீழ்மைபடுத்தியுள்ளதை நன்கு காணலாம் .அவ்வித வேற்றுமையுணர்ச்சிக்கோ ,தற்பெருமைக்கோ பௌத்தத்திற் சிறிதும் இடமில்லை.
ஒருகாலத்தில் கௌண்டிணியரைத் தலைமையாகக் கொண்ட கடுந்தசிகள் ஐவருடன் சித்தார்த்தரும் சேர்ந்திருந்து, கடுந்தவத்தை மேற்கொண்டார்.
பிறகு உடலை வருத்துங்கடுந்தவத்தால் உண்மை ஞானத்தைக் காண்டலரிது என அதனை விடுத்து ,ஒழுக்கத்தினால் ஏற்படும் உள்ளத்தூய்மையின் உயர்ந்த ஞான எல்லையாம் மற்றற்ற போதி நிலையைச் சித்தார்த்தர் அடைந்தபின் மக்கட்கு துக்க நிவாரண மார்க்கத்தை விளக்க்ப் புறப்பட்டார் .வழியில் பழைய
தோழர்களாகிய தவசிகளை கண்டார்.அவர்களருகே புத்தர் நெருங்கியபோது அவரை வரவேற்று உபசரித்த அத்தவசிகள் அவரது குடும்பப்பெயரை பெருமைப்படுத்த நினைத்து கௌதமரே என்று அழைத்தார்கள். அப்போது புத்தர் எனது குடும்பப்பெயரைப் பெருமை படுத்த நினைத்து என்னை கௌதமரே என்று அழைக்காதீர்கள் மக்களாய் பிறந்தோருள் உயர்வு ,தாழ்வு கற்பிக்கும் வேற்றுமையுணர்ச்சிக்கு யான் உட்பட்டவன் அல்லன்.மன்பதை யாவும் ஒன்றெனெக்கருதி அருளறத்தை மேற்கொள்ளும் ஒருவரை உயர்வும், தாழ்வும், மேன்மையும் ,கீழ்மையும் கற்பிக்கக்கூடிய குடும்பப்பெயரலாவது, குலப்பெயரலாவது அழைத்தல் தகுதியுடைத்தன்று. எவ்வுரையும் தன்னுயிர் போல் பார்க்கும் பரந்த உள்ளத்தவராய் சிறந்து விளங்கும்வீர்களாக என்று கூறித் தனது முதற் பிரங்கமாகிய , தர்மச் சக்கர பிரவ்ர்த்தனமெனும், அறவாழியை அவர்களுக்கு விளங்குபடியுரைத்தார். இதை திரிபிடகத்தில் தர்ம சக்கரபிரவர்த்தன சூத்திரம் என்று கூறப்பட்டுள்ளது . இவ்விடத்தில்தான் அசோக சக்கரவர்த்தி “ கற்றூணை எழுப்பி புத்தர் போதித்த தர்ம சக்கரமாகிய அறவாழியை சித்தரித்திருக்கிறார்.
நமது இந்திய ஜனநாயக் ஆட்சியின் மணிக்கொடியில் அமைக்கப்பட்டு இலங்குவது ஆட்சியின் சின்னமாக முத்துரையிடப்பட்டு வருவதும், இவ்வறவாழியாம் தர்மசக்கரம் என்பதையும் நாம் அறிந்து ஒழுக வேண்டும். இதுபற்றியே,
”ஆதி முதல்வன் அறவாழியாள்வோன்
அறக்கதிராழி திறம்ப்வுருட்டிக்
மறகடந்த வாமன்”
என்று இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. பிறவிப்பிணி மருத்துவன் எனப்போற்றப்படும் இப்பெருமகன் கய்லைம்பதி அடுத்துள்ள உலும்பிணி சோலையின்கண், பிறந்தார் என்று அசோக சக்கரவர்த்தியால் ஒரு கற்றூண் எழுப்பப்பட்டு,
உலகொளியாம் புத்தரென்னும்
ஞான மூர்த்தி பிறந்த்விடம் , என எழுதப்பட்டிருப்பதை இன்றுங்காணலாம் .இவர் தோன்றியபோது
விந்தியமலைக்கு வடதிசை கங்காநதியின் இரு அருங்கிலும் சந்நியாசிகளைத் தலைமையாகக் கொண்ட வேத வேள்வி மார்க்கம் பரவியிருந்தது. இரத்தம் தோய்ந்து நிரம்பிய பலி பீடங்கள், குருக்களின் இருக்கையாக காணப் பட்டன.
மக்கள் மூடநம்பிக்கையால், மடமையும், வறுமையுமாகிய இருளால் சூழப்பட்டிருந்தனர். அதுகாலை அறிவுச் சுடர் பரப்பி அறியாமை இருளைப்போக்கும் இள ஞாயிறு போல் புத்தர் தோன்றி , மெய்யொளியைப் பரப்பினார். இக்கருத்து விளங்குபடி மணிமேகலையில் ,
’’ உயிர்களெல்லாம் உணர்வு பாழாகிப்
பொருள் வழங்கும் செவித்துளை தூர்ந்தறிவிழந்த
அறந்தலையுலகத்து அரும்பாடு சிறக்கச்
சுடர்வழக்கற்றுத் தருமாறு காலையோர்
இளவல் ஞாயிறு தோன்றிதென்ன?
நீயோ தோன்றினை நின்னடி பணிந்தேன். ’’
எனக் கூறியிருத்தல் ஊன்றிகவனிக்கத்தக்கதாம். இம்மாபெரும்
முதல்வன் , உலகியல் அறிந்து அருளறம் பரப்பி வருங்காலத்தில் சிராவஸ்தி நகரை அடுத்த ஆலவி புரத்தில் அறவுரை போதித்துக்கொண்டிருந்தபோது , ஆலவிபுர வாசியான ஒரு ஏழை குடியானவன் காணாமற்போனதன் எருதைத்தேடி பிடிப்பதற்காக
காலையில் புறப்பட்டு பலதிசைகளிலும் தேடியலைந்து எருதைக் கண்டுபிடித்து மந்தையில் சேர்த்துவிட்டு களைப்பும் , பசியும் மிகுந்திருந்தும் , வீட்டுக்குச் சென்றால் அறவுறரைக் கேட்கத்தவறிப்போம் என்றெண்ணியவனாய் விரைந்தோடி வந்து ,
கூட்டத்தில் நுழைந்து முன்சென்று , புத்தர் அமர்ந்து இருக்குக் பீடத்திற்கு ஒருபுறமாய் அமர்ந்தான். களைப்பினால் சோர்வடைந்திருந்த அவன் முகத்தைப் பார்த்த புத்தர் , அவன் களைப்பினால் சோர்வடைந்திருக்கும் காரணத்தை விசாரித்தறிந்துக் கொண்டு , அறச்சாலையை கவணிப்பவரை அவவேழை குடியானவன் பசியாறும்படி உணவளிக்க சொன்னார். அவன் உண்டு பசி தணிந்து , கூட்டத்திற்கு வந்தபின், தமது அறவுரையை கூறி முடித்தார், என்று பேசிக்கொண்டார்கள்.
அவர்களது உணர்ச்சியின் போக்கைக்கண்ட பகவன் ‘’ ஜிகச்சா பரம ரோகர் ‘’ என்ற வாக்கியத்தை சொல்லி , பசிப்பிணி மிக கொடியது , பசியினால் துன்பப்படும் ஒருவன் அறவுரைகளைச் சரிவரக் கவணிக்கமாட்டான்.ஒருக்கால் அவனுக்கு அது துன்பமாக காணப்படும்.அந்நிலையில்நாம் அவனை வருத்தியவர்களாவோம்.
ஆகலின் பசிப்பிணியாற்றுவதே நமது அருளறத்திற்குரிய கடமையாகக் கொள்ள வேண்டுமென விளக்கினார்.
இங்ஙனம் பௌத்தம் கடுமையான பட்டினி விரதங்களை
அறவே நீக்கிவிடுவதால் , பிற மார்க்கத்தினர் , பௌத்தர்களை புஷ்டி மார்க்கத்தை பாராட்டுகின்றவர்கள் என்று இகழ்ந்து கூறுகின்றவர்கள் என்று இகழ்ந்து கூறுகின்றனர். உணவால் உடம்பும் , உடம்பால் உயிரும் உயிரால் உணர்வும் தொடர்ந்து இயங்குவதாலிவற்றை ஒன்றினின்று ஒன்றை அறவே நீக்கி உண்மை காண்டலரிதென பௌத்தம் மறுத்துக்கூறுகிறது. அன்றியும் நல்லுணர்வு தோன்றுவதற்கும் , ஆகலின் , உடல் நலத்திற்கேற்ற நல்லுணவை , இயல்பான அளவு உட்கொண்டு ,உணர்வின் தூய்மையைப் பெருக்க மக்கள் முயற்சிக்க வேண்டும் . ஆதலால் பட்டினிவிரதங்களால் உடலை வருத்திக் கொண்டு , உடல்நிலையைக்கெடுத்துக் கொள்ளுதலுமாகிய இருவித அளவுகடந்த செயல்களையும் அறவே நீக்கி , இயல்பான நடுவு நிலைமையில் நின்று பொருந்திய அளவு நுகர்ந்து இன்புற வேண்டுமென்பதே பௌத்தத்தின் நோக்கமாம் . உடையின்றி திரிதலும், மொட்டை அடித்தலும் ,ஜடை தரித்தலும் , நாகரீகமற்ற ஆடையை உடுத்திக்கொள்ளுதலும் , பலி கொடுத்தலும் ,கடினமாய் தூங்காதிருத்தலும் , அக்னிக்குப் பலியிடுதலும், குற்றமுள்ள எண்ணங்கள் நினைந்தவனை , சிறிதும் தூய்மைபடுத்தாவாம். வேதத்தை ஓதுதலும் , தரையிற் படுத்தலும், நன்னெறியிற் செல்லாதவளை தூய்மைபடுத்தாவாம்.
எல்லாச் செயல்களுக்கும் மனச்செயலே ஆதாரம். அளவு கடந்து
நெடுநாள் வரைக்கும் எவ்விதமான கடின தவங்களையும் உடல் நலியும்படிபழகினாலும், மனதை நேர்மையான வழியிற்செலுத்தும்
ஆற்றலில்லாவிட்டால் ஒன்றும் பயன்படாது. ’’ சித்த தீனம் தர்ம
தீனம்போதி’’என்றபடி சத்தர்மத்தில் வழக்கம் மனதைச்சார்ந்திருக்கிறது ஆதலின் ஒவ்வொருவரும் தத்தம் மனதை நடு நிலைமையான வழியில் நிலைக்கச் செய்தலே பழுதிலா வாழ்க்கைக்கேதுவாம்.
ஒரு காலத்தில் பகவன் புத்தர் மகா நாமன் என்னும் அரசனையும் பார்த்து அரசனே! மனிதன் மிகுந்த சுகத்தையே அளவுகடந்து அநுபவிக்க வேண்டுமென்ற வேட்கையில் சிக்கினால் சொற்ப துக்கமும் பெருந்துக்கமாகவே துன்புறுத்தும்.
சுகத்தை மிகுதியாக விரும்பாதவிடத்தே பெருந்துக்கமென்று கருதப்படுவதும் சொற்ப துக்கமாகவே தோன்றும். சுகத்திற்கும் , துக்கத்திற்கும் நம்முடைய மனமும் , செயலுமே காரணமாகும்.
பகையைப்பெருக்கி கொள்கிறவர்களும் நாமே , ஆகையால் புறப்பகைவரிடம் வெற்றிக்கொள்ளும் வீரனைவிட நமக்குள் இருக்கும் அகப்பகைவர்களாம் காம , வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களை வெனறவனே சுத்தவீரனாவான் எனக்கூறியுள்ளார். பசியும் , பிணியும் , பகைமையும் நீங்கிய சமத்துவ வாழ்க்கையே சமூக நல்வாழ்க்கை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து பசிப்பிணி நீங்கும் பண்பிற்கு ஏதுவாய் ஈகை என்னும் அறிச்சுரந்த அன்பு சமூகத்தில் பரவ வேண்டும்.
இதுபற்றியே ’’ தானம் , சீலம் , பிரக்ஞா ,பாவணா ’’
சூத்திரத்தின்படி தானத்தை முன் வைத்து சீலத்தை அதற்கடுத்தபடியாக கூறப்பட்டிருக்கிறது. தானத்தின் நோக்கம் செல்வர்களை எல்லாருடைய சமத்துவத்தை வளர்க்கச் செய்தலுக்கும் ஏழைகளை நன்னெறியில் செலுத்துவதற்கும் , துணைதரும் பொருட்டேயாம். வருமானத்திற்குரிய ஊதியத்தின் ஆதாரங்களை மக்கள் சமுதாயத்தில் பரவச்செய்தல் அவர்களுடைய உடல் நலத்தைப்பெரிதும் வளர்க்கக்கூடியெதாகவும் இருப்பதுடன் அவ்விதம் எல்லாருடைய
நன்மைக்காகவும் பாடுபடுவதில் ஒருவித பெருமையும் மகிழ்ச்சியும் அடையும் பண்பாட்டை விருத்திச் செய்யக்கூடியதாக இருக்கின்றது. ஆகலின் பசித்தோர் யாவராயினும் அவர்பசிப்பிணியைப் போக்கவேண்டியதே முதற்கடமையாக அருளறத்திலே விளக்கப்பட்டிருக்கிறது. மக்கள் சமுதாயத்தில் பசிப்பிணிக்கு இடமில்லாத வாழ்க்கை ஏற்படுமானால் உலகத்தில் காணப்படும் பல கொடிய குற்றங்கள் தோன்றுதற்கு ஏதுவில்லாமற் போகும்.
’’ மண்டினிஞாலத்து வாழ்வோர்க்
கெல்லாம் உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே , பசிப்பிணி
யென்னும் பாவியது தீர்த்தோர்
இசைச்சொல்லளவைக்கு என்னா நிமிராது ’’
என அழகுற கூறியிருக்கும் ஆன்றோரின் அருமருந்து மக்கள் சமுதாயத்தில்திளைத்துபசிப்பிணிஒழிதற்காகஊக்கங்கொள்வோ
மென்ற உறுதி உள்ளத்திற் கொண்டு இந்த 2500 ம் ஆண்டின் பிறவிப்பிணி மருத்துவனாம், போதிச் செல்வனின்திருவிழாவைப் பெருவிழாவகக் கொண்டாடுவோமாக.
’’ புத்தங் சரணங்கச்சாமி
தர்மங் சரணங்ச் சாமி
சங்கம் சரணங்கச்சாமி ’’